Monday 25 February 2013

பிஎஸ்எல்வி -சி 20 ராக்கெட் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை மாலை சரியாக 6.01-க்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ராக்கெட் சுமந்து சென்ற 7 செயற்கைக் கோள்களும் அடுத்த 25 நிமிடங்களுக்குள் அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி பாராட்டு தெரிவித்தார். இஸ்ரோ விஞ்ஞானிகளின் வெற்றியை பாராட்டுவதாக கூறினார். விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருப்பதாகவும் குடியரசுத் தலைவர் பாராட்டினார்.
முன்னதாக, இந்த ராக்கெட் மாலை 5.56 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 5 நிமிடங்கள் தாமதமாக ஏவப்பட்டது. இது, பி.எஸ்.எல்.வி வரிசையில் இஸ்ரோ ஏவிய 23-வது ராக்கெட். பிரான்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இஸ்ரோவும் இணைந்து உருவாக்கிய, கடலின் தட்பவெப்ப நிலையை அறிய உதவும் சரல் உள்ளிட்ட 7 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
இதனை குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி, ஆந்திரா முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். ராக்கெட் ஏவப்படுவதையொட்டி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.


பிஎஸ்எல்வி -சி 20 பயன்கள் என்ன: விண்வெளித்துறையில் வளர்ந்த நாடுகளை மிஞ்சும் வகையில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, வான்வெளி ஆராய்ச்சிக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு விதமான செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது.
அந்த வரிசையில், இந்திய- பிரான்ஸ் கூட்டு முயற்சியில் உருவான சரல் என்ற செயற்கைக்கோள் உட்பட மொத்தம் 7 செயற்கைகோள்களை பிஎஸ்எல்வி -சி 20 என்ற ராக்கெட் மூலமாக இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தியது.
இந்த ராக்கெட் எடுத்துச்செல்லும், 407 கிலோ எடையுள்ள சரல் செயற்கைக்கோள், கடல் வளங்கள், பருவநிலை மாற்றத்தால் உயர்ந்து வரும் கடல் நீர் மட்டம் ஆகியவை குறித்து நடத்தப்படும் ஆய்வு பணிக்கு உதவும்.
இந்த செயற்கைக்கோள் 785 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து பூமியை சுற்றிவரும் விதமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக பெறப்படும் தகவல்களை பகிர்ந்து கொள்ள இந்தியாவும்- பிரான்சும் ஒப்பந்தம் செய்துள்ளன.
சரல் மட்டுமின்றி, கனடாவின் செப்பையர், நியோசாட், ஆஸ்திரியாவின் யுனிபிரைட், பிரைட், டென்மார்க்கின் ஆயுசாட் மற்றும் பிரிட்டனின் ஸ்டான்ட் ஆகிய 6 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி -சி 20 என்ற ராக்கெட் மூலமாக ஏவப்பட்டுள்ளது. இவற்றில் நியோசாட் என்ற செயற்கைக்கோள் பூமிக்கு மிக அருகில் வரக்கூடிய விண்கற்கள் குறித்து ஆய்வு செய்யும்.
யுனிபிரைட், பிரைட் ஆகியவை பிரகாசமான நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளி மாறுபாடு குறித்து ஆய்வு செய்ய உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே போல், ஆர்க்டிக் பகுதி கடல் போக்குவரத்‌திற்கு ஆயுசாட் பயன்படுத்தப்படவுள்ளன.
மேலும், ஸ்டான்ட் என்ற பிரிட்டன் செயற்கைக்கோள், விண்வெளியில் செல்போன்களின் இயக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.
அயல்நாட்டு செயற்கைகோள்களை ஏவுவதன் மூலம் பெருமளவில் அன்னியச்செலாவணியையும் இஸ்ரோ ஈட்டுகிறது.

No comments:

Post a Comment